புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் ஸ்ரவண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் பாதைகளில் உணவகம் நடத்தும் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்துகின்றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்களுடன் சோதனை நடத்தி வருகிறார். அதன்படி உணவக பணியாளர்களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்தது சர்ச்சையானது. எனினும், உணவக பணியாளர் தஜும்முல் என்பவர், கடை உரிமையாளர் சொன்னபடி கோபால் என பெயரை மாற்றி வேலை செய்வதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மேலும் 30 இந்துத்துவா அமைப்பினர் உணவகங்களின் உரிமையாளர் அடையாளங்களை கண்டறிய களம் இறங்கியுள்ளனர். அவர்கள் ராமர், ஹனுமர் மற்றும் சிவன் படங்களுடன் கும்பலாக கடைகளுக்கு செல்கின்றனர். பிறகு, கடையில் உள்ள பேடிஎம் க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து உண்மையான பெயர்களை கண்டுபிடிக்கின்றனர்.
இதுகுறித்து இந்து சங்கர்ஷ் சமிதி உறுப்பினர் நரேந்தர் சிங் தோமர் கூறுகையில், ‘‘எச்சில் உள்ளிட்ட அசுத்தமானவற்றை உணவில் கலந்து சிலர் எங்கள் மத நம்பிக்கையில் விளையாடுகின்றனர். சனாதனத்தை காக்கும் இப்பணியில் எங்களிடம் உண்மையான பெயரை கூறுவதற்கு என்ன தடை’’ என்று தெரிவித்தார்.
உ.பி.துணை முதல்வர்களில் ஒருவரான பிரஜேஷ் பாதக் கூறு கையில், ‘‘உ.பி.யில் குறிப்பிட்ட சமூகத்தினர் சிலர் காவடி யாத்திரையின் புனிதத்தை கெடுக்க முயற்சிக்கின்றனர். இதனால், உ.பி. அரசு உத்தரவு சர்ச்சையா கிறது. இந்த சர்ச்சைக்கு அவர்கள்தான் காரணமே தவிர அரசு அல்ல’’ என்றார்.
உ.பி.யின் முக்கிய மவுலானா ஷகாபுதீன் ராஜ்வீ பரேல்வி கூறுகையில், ‘‘எந்த ஒரு முஸ்லிமும் தனது உண்மையான பெயருடன் மத அடையாளத்தை மறைப்பது தவறு. உண்மையான முஸ்லிம்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதால் தயங்காமல் தன் மத அடையாளங்களை முஸ்லிம்கள் கூற வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.