புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவின் மொத்த மருத்து சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக லக்னோவில் உள்ள மாநில காவல் துறை சிறப்பு படை (எஸ்டிஎப்) தலைமையகத்துக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்யும் பணி உதவி மருந்து ஆணையர் நரேஷ் மோகன் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழுவும் எஸ்டிஎப் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.
எஸ்டிஎப் படையினர் ஒரு ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனர். அதில் சென்னையிலிருந்து ரயில் மூலம் போலி மருந்துகள் வருவதாகவும், அவை பன்சால் மெடிக்கல் மற்றும் ஹேமா மெடிக்கல் ஸ்டோருக்கு ஆட்டோவில் கொண்டுபோய் சேர்க்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு அந்த இரண்டு மருந்து கடைகளில் சோதனை செய்த எஸ்டிஎப் படை போலி மருந்துகளை உறுதி செய்தது. அவற்றின் கிடங்குகளும் அடையாளம் கண்டு சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஹிமான்ஷு அகர்வால் என்பவர் எஸ்டிஎப் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து உதவி மருந்து ஆணையர் நரேஷ் மோகன் தீபக் கூறும்போது, “ஹிமான்ஷுவிடம் நடத்திய விசாரணையில் அவரது கிடங்கிலும் ஏராளமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதில், புதுச்சேரியின் மீனாட்சி பார்மா பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு ரசீதும் கிடைத்துள்ளது. இது, போலியாக தயாரிக்கப்பட்ட அலெக்ரா-120 எம்.ஜி மருந்துகளுக்கானது. இவை சென்னை ரயில் நிலையத்திலிருந்து ஆக்ராவின் ராணுவப் பகுதியான கான்ட் ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. புதுச்சேரியில் ஏராளமான மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் இருப்பதாகவும், அவற்றில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு இங்கு அனுப்பப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த எங்கள் படை புதுச்சேரிக்கு செல்ல உள்ளது” என்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு குஜராத்தில் பிடிபட்ட ஹவாலா ஊழல் வழக்கில் லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஹிமான்ஷுவின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனவே, ஹிமான்ஷுவிடம் தற்போது மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்துகின்றனர். இதன்படி, ஹேமா மெடிக்கல் ரூ.450 கோடி மற்றும் பன்சால் மெடிக்கல் ரூ.350 கோபு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.