வாராணசி: உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: இன்றைய தினம் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.20,500 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் விரைவில் நிறுத்தப்படும் என்று காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால் இந்த திட்டம் இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி தன்-தன்யா கிரிஷி யோஜனா என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பின்தங்கிய மாவட்டங்களில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.24,000 கோடி செலவிடப்படும். வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மக்களின் கடமை: நாம் வெகுவிரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை எட்ட உள்ளோம். இந்த நேரத்தில் நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு மிகவும் முக்கியமானவை. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் மக்களுக்கும் சில கடமைகள், பொறுப்புகள் உள்ளன. அதாவது நாடு முழுவதும் உள்ளூர் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்ளூர் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று மக்கள் உறுதியேற்க வேண்டும். நமது வீட்டுக்காக எந்த பொருளை வாங்கினாலும் அது உள்நாட்டு தயாரிப்பாக மட்டுமே இருக்க வேண்டும். இந்திய தொழிலாளர்களின் வியர்வைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்த நேரத்தில் இந்திய வணிகர்களிடம் சிறப்பு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இப்போது நிலையற்ற சூழலைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். எனவே சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அடுத்து வரும் மாதங்கள் பண்டிகை காலம் ஆகும். குறிப்பாக வரும் அக்டோபரில் தீபாவளியை கொண்டாட உள்ளோம். திருமண சீசனும் வருகிறது. பண்டிகை மற்றும் திருமண சீசனில் உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.
வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்து நமது நாட்டின் செல்வத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். எனது அறிவுரையை ஏற்று பலரும் உள்நாட்டிலேயே திருமண விழாக்களை நடத்துகின்றனர். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சுதேசி இயக்கம், சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது. சுதேசி இயக்கத்தின்படி உள்நாட்டு பொருட்களை வாங்குவது காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும். அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் மட்டுமே வளர்ந்த இந்தியா என்ற லட்சியத்தை நிச்சயமாக எட்ட முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25 சதவீத வரியை விதித்துள்ளார். இந்த சூழலில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.