அனுப்கர் (ராஜஸ்தான்): உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய உபேந்திர திவேதி, “இந்தியா ஒரு நாடாக தற்போது முழுமையாக தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன்போது காட்டிய நிதானத்தை இந்தியா இனி காட்டாது. இம்முறை நாம் ஒரு படி முன்னேறி, உலக வரைபடத்தில் நீடிக்க விரும்புகிறதா இல்லையா என்பது குறித்து பாகிஸ்தான் சிந்திக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம்.
உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். இப்போதே முழுமையாக தயாராக இருங்கள். கடவுள் விரும்பினால், வாய்ப்பு விரைவில் வரும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் நிலவும்போது விழிப்புணர்வுதான் மிகவும் முக்கியமானதாகிறது. இந்தியா தனது ராணுவ மோதலின்போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை அம்பலப்படுத்தியது. இல்லாவிட்டால், அவை உலகின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானுக்குள் ஒன்பது பயங்கரவாத தளங்களை இந்தியா குறிவைத்தது. இதில், ஏழு இந்திய ராணுவமும், இரண்டு விமானப்படையும் குறிவைத்தன.
பயங்கரவாதிகளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே இலக்குகளை நாங்கள் அடையாளம் கண்டோம். பயங்கரவாதிகளின் தளங்களை தாக்குவதே எங்கள் நோக்கம். அந்நாட்டின் குடிமக்கள் மீது எங்களுக்கு எந்த புகாரும் இல்லை. அவர்களின் நாடு பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதால்தான் அந்த இலக்குகள் தாக்கப்பட்டன” என தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா மே 7-ம் தேதி ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் கடுமையான பதிலடியை அடுத்து போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததை ஏற்று மே 10-ம் தேதி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது.