புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 6) காலை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு – ஸ்ரீநகர் இடையே உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்புப் பாலம்: செனாப் ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது செனாப் ரயில் பாலம். உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான இதன் நீளம் 1,315 மீட்டர். இது நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை இது வெகுவாக குறைக்கும். இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.
போக்குவரத்துத் திட்டங்கள்: உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் போக்குவரத்து திட்டத்தையும் நாளை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். 272 கி.மீ தொலைவிலான இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.43,780 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டது. 119 கி.மீ தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும். இது பிராந்திய அளவிலான போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, சமூக – பொருளாதார ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயில் உள்ள கத்ரா பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மேலும், பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
தேசிய நெடுஞ்சாலை-701-ல் ரஃபியாபாத் முதல் குப்வாரா வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை – 444-ல் ரூ.1,952 கோடிக்கும் அதிக மதிப்புடைய ஷோபியன் புறவழிச்சாலை கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை-44-ல் உள்ள பெமினா சந்திப்பிலும் இரண்டு மேம்பாலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். கத்ராவில் ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி உயர் மருத்துவ நிறுவனத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.