இந்தூர்: மத்திய பிரதேசம், இந்தூரின் கவுரி நகரை சேர்ந்தவர் சதீஷ் சவுகான் (30). இவர் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராவை பொருத்தி உள்ளார். வீட்டில் இருந்தாலும், வெளியே இருசக்கர வாகனத்தில் சென்றாலும் ஹெல்மெட் கேமராவுடன் அவர் வலம் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருக்கிறது. அவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது வீட்டின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினேன். ஆனால் அந்த கேமராக்களை அண்டை வீட்டுக்காரர்கள் உடைத்துவிட்டனர்.
வேறு வழியின்றி ஹெல்மெட்டில் கேமராவுடன் சுற்றித் திரிகிறேன். ஒருவேளை நான் உயிரிழந்தால் குற்றவாளிகளை கேமரா காட்டி கொடுத்துவிடும்.
ஹெல்மெட் மேன் என்று என்னை பலரும் கிண்டல் செய்கின்றனர். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கவசம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தூர் நகரின் பிரதான சாலையில் தலையில் ஹெல்மெட் கேமராவுடன் சதீஷ் சவுகான் பதற்றத் துடன் பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.