லக்னோ: உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம், மஹ்முதாபாத் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் பிரிஜேந்திர குமார் வர்மா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பெண் ஆசிரியர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக சீதாப்பூரில் உள்ள கல்வி அதிகாரி விளக்கம் கேட்டிருந்தார்.
இதன்பேரில் சீதாப்பூர் வந்த பிரிஜேந்திர குமார், கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங்கை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில் அகிலேஷ் பிரதாப் அதிருப்தி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரிஜேந்திர குமார், தனது பேன்ட் பெல்ட்டால் அகிலேஷ் பிரதாப்பை பல முறை தாக்கினார். சக ஊழியர்கள் ஓடிவந்து, பிரிஜேந்திர குமாரை அப்புறப்படுத்தினர்.
பிரிஜேந்திர குமார், பதில் சொல்ல முடியாத போது தன்னை திட்டியதாகவும் பிறகு ஆத்திரம் அடைந்து பெல்ட்டால் தாக்கியதாகவும் கல்வி அதிகாரி கூறினார். இது தொடர்பாக சீதாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரிஜேந்திர குமாரை கைது செய்தனர். இதற்கிடையில் கல்வி அதிகாரியை தலைமை ஆசிரியர் பெல்ட்டால் தாக்கும் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.