டேராடூன்: உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உத்தராகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தரளி கிராமம் அமைந்துள்ளது. இமயமலையில் சுமார் 10,200 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமத்தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது.
கீர் கங்கா நதியில் கரைபுரண்ட வெள்ளத்தால் தரளி கிராமம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.ராணுவம், விமானப் படை, தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள், மாநில காவல் துறை இணைந்து இரவு பகலாக தரளி கிராமத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளன. வெள்ள பாதிப்புகளால் ஆங்காங்கே சிக்கித் தவித்த 274 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
முதல்வர் ஆய்வு: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் நேற்று பவுரி கர்வால் பகுதியில் ஆய்வு நடத்தினார். அவர் கூறும்போது, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படும். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.
தரளி கிராமத்தின் பெருவெள்ள பாதிப்பு குறித்து மீட்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது: கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழி என்பதால் தரளி கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன. கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 30 ஓட்டல்கள், 25 தங்கும் விடுதிகள் தரைமட்டமாகி உள்ளன. 50 வீடுகளும் முழுமையாக சேதமடைந் திருக்கிறது. குடிநீர், மின்சாரம், இணைய சேவை கட்டமைப்புகள் அழிந்து தரளி கிராமம் தனித்தீவாக மாறியிருக்கிறது.
இப்போதைக்கு காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 30 அடி உயரத்துக்கு சகதி தேங்கி உள்ளது. மோப்ப நாய்களின் உதவியுடன் பெருவெள்ளம் பாய்ந்த பகுதிகளில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரளி கிராமத்தின் சாலைகளை சீரமைத்து, குடிநீர், மின்சாரம், இணைய சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த 2013-ம் ஆண்டில் கேதார்நாத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் அதன்பிறகும் உத்தராகண்டில் நதிகள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
உத்தராகண்ட் மாநிலம் முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மேகவெடிப்பு, நிலச்சரிவு அபாயத்தில் உள்ளன. அந்த கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பக்தர்கள் அதிகம் கூடும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களில் இயற்கை பேரிடர்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.