டேராடூன்: உத்தராகண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் புகழ்பெற்ற மானசா தேவி கோயில் உள்ளது. சிவாலிக் மலைப் பகுதியில் பில்வா பர்வத் உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஜூலை – ஆகஸ்டில் வரும் ஷ்ரவண மாதத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில், கடந்த 11-ம் தேதி ஷ்ரவண மாதம் தொடங்கியதால் மானசா தேவி கோயிலுக்கு பக்தர் வருகை அதிகரித்துள்ளது.
நேற்று காலை மானசா தேவி கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் கீழே விழுந்துள்ளனர். ஆனால், அந்தப் பாதையில் மின்சாரம் செல்லும் வயர் இருப்பதாக சிலர் கூச்சலிட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் இறங்கிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் கீழே விழுந்துள்ளனர். இதைப் பொருட்படுத்தாமல் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஹர்த்வார் மாவட்ட ஆட்சியர் மயுர் தீக்சித் கூறும்போது, “மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு செல்லும் பாதையில் மின்சார வயர் இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும்” என்றார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்கூறும்போது, “மானசா தேவி கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட செய்தி வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பக்தர்களின் நலனுக்காக மாதா ராணியிடம் பிரார்த்தனை செய்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.