டேராடூன்: உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல்போன ஓட்டல் அதிபரை, அவரது மனைவி தேடி அலைகிறார்.
கடந்த 5-ம் தேதி உத்தராகண்டின் கங்கோத்ரி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி என்ற கிராமம் முழுமையாக அழிந்துள்ளது. கடந்த சில நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். சுமார் 150 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தரளி கிராமத்தை சேர்ந்த சுபம் நெகி (32) அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். அவரது ஓட்டல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. அவரையும் காணவில்லை. அவரது மனைவி கோமல் (28) கடந்த சில நாட்களாக கணவரை தேடி அலைகிறார்.
இதுகுறித்து கோமல் கூறியதாவது: பெருவெள்ளம் ஏற்பட்டபோது நான் தரளி கிராமத்தில்
இல்லை. உத்தரகாசிக்கு சென்றிருந்தேன். வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் தரளி கிராமத்துக்கு விரைந்து சென்று எனது கணவரை தேடி வருகிறேன். கட்டுப்பாட்டு அறை, மருத்துவமனை, உறவினர்கள் வீடுகளில் தேடி அலைகிறேன். எனது கணவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரியில் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவர் உயிரோடு இருப்பார் என்று நம்புகிறேன். எப்படியாவது அவரை தேடி கண்டுபிடிப்பேன். இவ்வாறு கோமல் கண்ணீர்மல்க கூறினார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ கேப்டன் குர்பிரீத் சிங் கூறியதாவது: தரளி கிராமத்தில் 300 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் 20 அடி முதல் 50 அடி உயரம் வரை சகதி மூடியிருக்கிறது. சுற்றுவட்டார சாலைகள், பாலங்கள் அனைத்தும் சேதமடைந்து உள்ளன. உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் பிரதான சாலை மிக கடுமையாக சேதமடைந்திருக்கிறது.
இந்த சாலையை சீரமைக்க 4 நாட்கள் வரை ஆகலாம். இதன்பிறகே நவீன இயந்திரங்கள், கனரக வாகனங்களை தரளி கிராமத்துக்கு கொண்டு வந்து சகதியை அகற்றி சடலங்களை மீட்க முடியும். இவ்வாறு கேப்டன் குர்பிரீத் சிங் தெரிவித்தார்.