புதுடெல்லி: “வக்பு (திருத்த) சட்டத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஒரு நல்ல அறிகுறி. அதே நேரத்தில் அது குறித்து அரசு ஆராயும்.” என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்தச் சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது.
இடைக்கால தடை: இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ‘வக்பு திருத்த சட்டம் முழுமைக்கும் இடைக்காலத்தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆனால் இந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு நாங்கள் இடைக்காலத்தடை விதித்துள்ளோம். வக்பு வாரியம் உருவாக்க ஒருவர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றுபவரா என்பதை தீர்மானிக்க விதிகள் வகுக்கப்படும் வரை இந்த தடை தொடரும்.
வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசு சொத்தா என்பதைத் தீர்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளித்தமைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகள் குறித்து தீர்ப்பளிக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது.
கிரண் ரிஜிஜு பேட்டி: உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பு குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “வக்பு சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அரசின் அனைத்து அம்சங்களையும் நோக்கங்களையும் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் வலுவாக முன்வைத்தார். இது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஒரு நல்ல அறிகுறி.
இந்த தலைப்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. சிலர் தேவையில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை நீங்கள் சவால் செய்ய முடியாது. சட்டத்தின் சில விதிகளை சவால் செய்யலாம். இந்த அம்சத்தில் உச்ச நீதிமன்றம் முத்திரை பதித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு இந்திய ஜனநாயகத்தின் வலிமையையும் நமது அமைப்புகள் மீதான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீதியை நோக்கி நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நேரடியாக பயனளிக்கும். வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை கொண்டு வரும். உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள விதிகள் குறித்து அரசு ஆராயும். என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் பார்ப்போம்” என தெரிவித்தார்.