புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பகிர்ந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது. இந்தியா – பிரான்ஸ் இடையே பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் நேர்மறையாக மதிப்பாய்வு செய்தோம்.
உக்ரைனில் நிகழும் மோதலை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் உட்பட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இந்தியா – பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் தற்போது தொலைபேசியில் பேசினேன். இந்த வாரம் வியாழக்கிழமை பாரிசில் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் எங்களுக்கு நெருக்கமான நாடுகளின் தலைவர்களுடன் நாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த முடிவுகளை அவருக்கு வழங்கினேன்.
நியாயமான, நீடித்த அமைதி உக்ரைனில் நிகழ்வதற்கான விருப்பத்தை இந்தியாவும் பிரான்சும் பகிர்ந்து கொள்கின்றன. எங்கள் நட்பு மற்றும் கூட்டாண்மையை கட்டியெழுப்புவதன் மூலம் அமைதிக்கான இந்த பாதையை வகுக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து முன்னேறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த பிரதமர் மோடி, அப்போது உக்ரைன் போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தினார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபருடன் கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளார்.