புதுடெல்லி: ‘உக்ரைன் போர் விவகாரத்தில் உங்கள் திட்டம் என்ன?’ என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்த கருத்தை இந்திய திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தோம். இந்த அறிக்கை தவறானதும், ஆதாரமற்றதுமாகும். அவர் (மார்க் ரூட்) தெரிவித்ததைப் போல, எப்போதும் பிரதமர் மோடி, அதிபர் புதினிடம் பேசியதில்லை. அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை.
நேட்டோ போன்ற ஒரு முக்கிய நிறுவனத்தின் தலைமை, கருத்துகளைத் தெரிவிக்கும்போது அதிக பொறுப்புணர்வையும் துல்லியத்தையும் கடைப்பிடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிரதமரின் செயல்பாடுகள் தொடர்பாக தவறாக சித்தரிக்கும் அல்லது ஒருபோதும் நடக்காத ஒன்றை நடந்ததுபோல தெரிவிக்கும் கற்பனையான அல்லது கவனக்குறைவான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ஏற்கெனவே தெரிவித்ததுபோல, இந்திய நுகர்வோர்களுக்கு எரிபொருள் விலை கணிக்கக் கூடியதாகவும், மலிவானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இந்தியா தனது நாட்டு நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க் ரூட் கூறியது என்ன? – முன்னதாக, நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், “இந்தியா மீதான ட்ரம்ப்பின் வரி ரஷ்யாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து புதினுக்கு போன் அழைப்புகள் பறக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இந்தியா அதிக வரி விகிதங்களை எதிர்கொள்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், உக்ரைன் போரில் ரஷ்யாவின் திட்டம் என்ன என்றும் அவர் புதினிடம் கேட்டுள்ளார்” என தெரிவித்தார். மார்க் ரூட்டின் இந்தக் கருத்தை இந்திய வெளியுறவுத் துறை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.