புதுடெல்லி: உக்ரைனில் வாழும் உக்ரைனியர்களை ரஷ்யாவாலோ, காசா மற்றும் பாலஸ்தீனத்தில் வாழும் பாலஸ்தீனர்களை இஸ்ரேலாலோ அழித்துவிட முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிக அளவில் மக்களைக் கொல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதியாாகக் கண்டுபிடித்துள்ளார். புதினுக்கு எது பொருந்துமோ அது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் பொருந்தும். உக்ரைனில் வாழும் அந்நாட்டவர்களை ரஷ்யாவால் அழித்துவிட முடியாது. அதேபோல், பாலஸ்தீனியரை அவர்கள் தாய் மண்ணிலிருந்து இஸ்ரேலால் அழிக்க முடியாது. 2300 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இதனைச் சொன்னார்:
சிறைநலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. (பொருள்: கடக்க முடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும்)” என தெரிவித்துள்ளார்.