புதுடெல்லி: ஈரானில் வேலைக்காக செல்லும் இந்தியர்களை அந்நாட்டில் உள்ள ஆள் கடத்தும் கும்பல் பிடித்து வைக்கிறது. பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டுமானால் கணிசமான தொகையை அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தாரை மிரட்டுகின்றனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘‘அனைத்து இந்திய குடிமக்களும் வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் அல்லது சலுகைகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, சுற்றுலா செல்பவர்களுக்கு மட்டும்தான் இந்தியர்களுக்கு விசா இல்லாத அனுமதியை ஈரான் அரசு அனுமதிக்கிறது. சுற்றுலா தவிர்த்த மற்ற வர்த்தகம், வேலை போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக விசா அவசியம். எனவே, ஈரான் விசா பெற்று தரும் முகவர்களுக்கும் குற்ற கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம். எனவே, இந்தியர்கள் மோசடியில் சிக்கி கொள்ள வேண்டாம்’’ என்று எச்சரிக்கை அளித்துள்ளது.
வடமேற்கு டெல்லியில் உள்ள நரேலாவைச் சேர்ந்த 26 வயது ஹிமான்ஷு மாத்தூர் என்பவர் ஈரானில் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மாத்தூரிடம் ஆஸ்திரேலிய விசாவில் கப்பல்களில் வேலை எளிதில் கிடைப்பதாக அமன் ரதி என்பவர் ஆசை காட்டியுள்ளார். அதற்காக, உ.பி. நொய்டாவின் தனியார் கல்வி நிறுவனத்தில் கப்பல் துறையில் ஒரு டிப்ளமா முடித்தார். பின்னர் தனது சகோதரர் மூலம் ரூ.12 லட்சம் செலுத்தி ஈரானுக்கு ரதியுடன் பயணம் செய்தார்.
ஈரானில் உள்ள சபாஹாரில், மாத்தூருடன் ரதியும் அவர்களது ஏஜென்ட் தொடர்புடைய ஒரு கும்பலால் கடத்தப்பட்டனர். ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவர்களிடம் பேசி ரூ.20 லட்சம் அளித்த பின் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா திரும்பிய பிறகு அவர்கள் கடந்த செப். 7-ம் தேதி டெல்லி போலீஸில் புகார் செய்தனர்.