சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. அதன்பின்னர் இருநாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டுழைப்பில் சுமார் ரூ.12,000 கோடியில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட நிசார் ரேடார் செயற்கைக்கோளின் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவுபெற்றன.
இதையடுத்து நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள்.. நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இதில் எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்பர்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும்.
12 நாட்களுக்கு ஒருமுறை … இந்த செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும். குறிப்பாக பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை அபாயங்களில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ள இடஞ்சார்ந்த தரவுகளை முழுமையாக வழங்கும். இதுதவிர நிசார் அனுப்பும் தரவுகளை நாசா, இஸ்ரோ மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் பெறமுடியும். அனைத்து தரவுகளும் 2 நாட்களில் பொதுவெளியில் சுதந்திரமாக அணுகக்கூடியதாக மாற்றப்படும். அவசரநிலைகளில் கிட்டதட்ட நிகழ்நேரத்தில் தகவல்கள் உடனடியாக பகிரப்படும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாசா – இஸ்ரோ பங்களிப்பு: இந்த திட்டத்தில் எல் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், ஜிபிஎஸ் ரிசீவர், அதிக திறனுடைய சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் (செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம், 12 மீட்டர் ஆண்டனா ரிப்ளெக்டர் ஆகியவற்றை நாசா வடிவமைத்துள்ளது. மறுபுறம் எஸ் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், 5.5 மீட்டர் நீளமுள்ள 2 சூரிய மின்தகடுகள் செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை இஸ்ரோ செய்துள்ளது. மேலும், இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்கான ராக்கெட் மற்றும் இதர பராமரிப்புகளையும் இஸ்ரோ மேற்கொண்டது.
தாமதம் ஏன்?: நிசார் செயற்கைக்கோளை 2023-ம் ஆண்டில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், செயற்கைக்கோள் உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டதால் ஏவுதல் தள்ளிப்போனது. தொடர்ந்து செயற்கைக்கோளில் உள்ள 12 மீட்டர் ஆண்டெனாவில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் கடந்தாண்டு கண்டறியப்பட்டன. அதன்பின் அவற்றையும் அமெரிக்கா கொண்டு சென்று நாசா விஞ்ஞானிகள் சரிசெய்தனர். அனைத்து பரிசோதனைகளும் சிறப்பாக முடிந்ததை அடுத்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இது ஜிஎஸ்எல்வியின் 18-வது திட்டமாகும். இதில் 14 திட்டங்கள் வெற்றி அடைந்துள்ளன. இந்த ஆண்டு இதற்கு முன்னர் இஸ்ரோ செலுத்திய 2 திட்டங்களும் தோல்வி அடைந்தன. இதனால் நிசார் திட்டத்தின் மீது உலகளவில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், சர்வதேச விண்வெளித் துறையில் இஸ்ரோவுக்கான மதிப்பை இது மீண்டும் உயர்த்தியுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பான், பிரான்ஸ், ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய விண்வெளி மையங்களுடன் சேர்ந்து வரும் காலத்தில் இஸ்ரோ பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது.
விவசாயத்தில் பங்களிப்பு: நிசார் செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் தரவுகள் விவசாயத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதற்காக செயற்கைக்கோளில் பயிர்கள் வளர்ச்சி மற்றும் மண்ணின் தன்மை, ஈரப்பத்தை ஆராய ஒரு சிறப்பு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மண்ணிலும் பயிர்களிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது, தாவரங்களின் ஆரோக்கியம் போன்ற தரவுகளை நுணுக்கமாக பெறமுடியும். இவை விவசாயிகள் பயிர்களை நடவு செய்து அறுவடை செய்வதற்கு உரிய சரியான காலகட்டத்தை புரிந்துகொள்ள உதவும். இது பருவநிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க வழிவகுக்கும்.
செயற்கைத் துளை ரேடார்: இந்த செயற்கைத் துளை ரேடார் (SAR) தொழில்நுட்பம்தான் துல்லியமான படங்களைப் பெற உதவுகிறது. ஒளியைச் சார்ந்து செயல்படும் வழக்கமான கேமிராக்கள் போல் இல்லாமல் இது அதன் சொந்த சிக்னல்களை அனுப்பி படம் பிடிக்கிறது. இந்த சிக்னல்கள் மலைகள், காடுகள் அல்லது ஈரமான மண்பரப்பு, பனிக்கட்டிகள் ஆகியவற்றில் மோதிய பிறகு, மீண்டும் ரிசீவர் சென்சாரை நோக்கிப் பிரதிபலிக்கிறது. இதன்மூலம் தெளிவான படங்களை எடுக்க முடிகிறது.
சிந்தடிக் அப்பர்சர் ரேடார் வழியாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகள், ஈரநிலங்கள், நிலத்தடி நீர்மட்டம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யலாம். இதில் 2 பேண்ட் ரேடார்கள் இருப்பதால் நிசார் செயற்கைக்கோள் மூலம் 10 மீட்டர் வரையான சிறிய பகுதிகளைகூட மிக தெளிவாக படம் பிடிக்கலாம். அந்தச் சிறிய பகுதியில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைகூட கண்டறிந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் வரும்காலங்களில் பூமியில் நிகழும் மாற்றங்களை விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்துகொள்ள நிசார் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.