கொழும்பு: இலங்கையின் வடமேற்கில், தலைநகர் கொழும்புவில் இருந்து 125 கி.மீ. தொலைவில் நிகவெரட்டியா என்ற இடம் உள்ளது. இங்குள்ள வனம் மற்றும் மலைப் பகுதியில் புகழ்பெற்ற நா உயானா புத்த மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்திற்கு செல்ல பழமையான கேபிள் கார் சேவையும் உள்ளது. தியானப் பயிற்சிகளுக்கு பெயர்பெற்ற இந்த மடாலயத்திற்கு உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு இங்குள்ள கேபிள் காரில் புத்த துறவிகள் பயணித்தபோது, கேபிள் திடீரென அறுந்தது. இதில் கேபிள் கார் பெட்டி அதிவேகத்தில் கீழ்நோக்கி சென்று ஒரு மரத்தின் மீது மோதியதாக கூறப்படுகிது. இந்த விபத்தில் 7 துறவிகள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்த 7 துறவிகளில் ஓர் இந்தியர், ஒரு ரஷ்யர், ருமேனியர் ஒருவரும் அடங்குவர் என போலீஸார் தெரிவித்தனர்.
காயம் அடைந்த 6 பேரில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த, நா உயானா மடாலயம் இலங்கையின் பழமையான புத்த வன மடாலயங்களில் ஒன்றாகும். இது, கிமு 3-ம் நூற்றாண்டை சேர்ந்தது என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மடாலய வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட துறவிகள் வசிக்கின்றனர். அதே நேரத்தில் பார்வையாளர்கள் தியானங்கள் மற்றும் பிற ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்” என்றும் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.