புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்தனர்.
பிஹாரில் அண்மையில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயரில் தங்களது பெயரும் இருப்பதாக இறந்தவர்கள் என காரணம் காட்டி நீக்கப்பட்ட 7 வாக்காளர்கள், ராகுல் உடனான சந்திப்பில் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் வாக்கு அளிக்கும் தங்களது உரிமையை திரும்ப பெற உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
“வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி!” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதோடு அவர்களுடன் உரையாடிய வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
இதை காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது. நீக்கப்பட்ட இந்த ஏழு பேரும் தேஜஸ்வி யாதவின் சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. “இது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் பிழை அல்ல. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வாக்குரிமை பறிப்பு செயல். வாக்கு திருட்டு அம்பலமான நிலையில், தற்போது பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் முடிவு தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வாக்காளர்கள் அல்ல அது ஜனநாயகத்துக்கு கொடுக்கப்பட்ட இறப்பு சான்று” என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கம்: பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.