ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இறகு பந்து (பாட்மிண்டன்) விளையாடிக் கொண்டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தின் நாகோல் உள் விளையாட்டு அரங்கில் ராகேஷ் (25) என்பவர் தனது நண்பர்களுடன் நேற்று காலையில் பாட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்டும் ஆட முயற்சித்தபோது, அப்படியே கீழே சரிந்தார். உடனே நண்பர்கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராகேஷ் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.
தினமும் உடற்பயிற்சி செய்ததுடன் இறகு பந்து ஆடுவதையும் வழக்கமாக கொண்டிருந்த ராகேஷ் ஏன் இறந்தார்? என்ற கேள்வி அனைவருடைய மனதிலும் எழுந்துள்ளது. ராகேஷின் மரணம் அவரின் குடும்பத்தாரை வெகுவாக புரட்டிப் போட்டுள்ளது.
ராகேஷ் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து கீழே விழுந்து இறக்கும் வீடியோ தற்போது தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக வயது வித்தியாசமின்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கரோனா நோய் பரவலுக்கு பின்னர் மாரடைப்பு அதிகரித்து விட்டதாக மக்கள் கருதுகின்றனர்.