கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரு குழுக்கள் இடையிலான மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மகேஷ்தலா என்ற கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் கடை கட்டுவது தொடர்பாக இரு குழுக்கள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது. இதில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன.
வன்முறையில் 5 பேர் காயம் அடைந்தனர். மேலும் வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீஸார் சிலரும் காயம் அடைந்தனர். அப்பகுதியில் அமைதியை பராமரிக்க பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வன்முறை தொடர்பாக ரவீந்திரநகர் போலீஸார் 7 வழக்குகள் பதிவு செய்து, இதுவரை 40 பேரை கைது செய்துள்ளனர். அப்பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை அரசியல் கட்சியினர் அங்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று முர்ஷிதாபாத் மற்றும் மகேஷ்தலா வன்முறை தொடர்பாக பாஜக உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, முர்ஷிதாபாத் வன்முறை தொடர்பாகவும் மற்றொரு பாஜக எம்எல்ஏ புனா பெங்ரா, மகேஷ்தலா வன்முறை தொடர்பாகவும் ஒத்திவைத்து தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால் இவற்றுக்கு சபாநாயகர் பிமன் பானர்ஜி அனுமதி மறுத்தார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மம்தா அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பிறகு அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
பாஜக உறுப்பினர்களின் நடத்தையை அமைச்சர்கள் சந்திரிமா பட்டாச்சார்யா, சஷி பஞ்சா ஆகியோர் கண்டித்தனர். காவி கொடிகளை அசைப்பதும், இந்து விரோத அரசு என்று முழக்கமிடுவதும் முறையற்றது, சட்டப்பேரவை மாண்புக்கு எதிரானது என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.