ஜம்மு விமான நிலையம் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் ஜம்மு விமான நிலையம் மீது பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள் திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
ஜம்முவின் சில இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு பகுதி முழுவதும் நேற்றிரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர்.
காஷ்மீரின் ஜம்மு பிராந்தியம், பூஞ்ச் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியது. இதில் எல்லையோர கிராமங்களை சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து ராணுவ, விமானப் படை அதிகாரிகள் கூறியதாவது: மே 7 மற்றும் 8-ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் குப்வாரா, பாரமுல்லா, உரி மற்றும் அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் ஜம்மு விமான நிலையம் மற்றும் ஜம்மு விமானப்படை தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோன்கள் திடீரென தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இவை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவ்வாறு ராணுவ, விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.