பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், இயற்கைக்கு மாறான வகையில் 11 பேர் மரணமடைந்ததாக தனித்தனியாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் போலீஸ் இதுவரை எஃப்ஐஆர் ஏதும் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், 11 பேரின் மரணத்தையும் இயற்கைக்கு மாறான மரணம் என்று தனித்தனியாக பெங்களூரு நகர போலீஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தால்? – ஒருவேளை பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சம்பவம் நடந்த பகுதி எந்த நீதிமன்ற சரகத்துக்குள் வருகிறதோ, சம்பந்தப்பட்ட அந்த நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை பற்றிய தகவலை போலீஸ் தெரிவித்திருக்க வேண்டும். அதேபோல் வழக்கு விசாரணையின் அத்தனை நகர்வுகளையும் நீதிமன்றத்துக்கு அவ்வப்போது தெரியப்படுத்த வேண்டும்.
ஆனால், இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீஸ் அறிக்கையில் பதிவு செய்தால், அந்த வழக்கில் குற்றவியல் விசாரணை இருக்காது. எனவே, சம்பவப் பகுதிக்கான தாசில்தார் விசாரணையை மேற்பார்வை செய்தாலே போதுமானது. இந்நிலையில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாதது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளுக்கும் வழிவகுத்துள்ளது.
கொள்கை வகுத்த அரசு: இதற்கிடையில், பெங்களூரு துயரத்தின் எதிரொலியாக கர்நாடக அரசு இனிமேல் இதுபோன்ற மெகா நிகழ்ச்சிகள், கூடுகைகள், கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை வகுத்துள்ளது என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுத்த போலீஸ்: பெங்களூரு வெற்றிக் கொண்டாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததாக உலா வரும் தகவல்களின் அடிப்படையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஜூன் 3 நள்ளிரவு தொடங்கி ஜூன் 4 அதிகாலை வரை ஆர்சிபி வெற்றியை கொண்டாடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டு சோர்வாக உள்ளனர். அதனால் தொடர்ந்து காலையிலேயே வெற்றிப் பேரணி பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தினால் போலீஸாருக்கு அழுத்தம் ஏற்படும் என்று கூறி அனுமதி மறுத்ததாக தகவல்கள் உள்ளன. இதனைச் சுட்டிக்காடியே பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
‘பிணத்தின் மீதும் அரசியல்’ – இந்நிலையில், மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், பாஜக பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசியல் செய்கிறது. நான் கர்நாடகா மக்களுக்கு மட்டும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பாஜகவினர் முட்டாள்தனமாகப் பேசுகின்றனர். இதுபோன்ற மோசமான விமர்சனங்களை முன்னெடுப்பதில் அவர்கள் தேர்ந்தவர்கள். பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் பிணத்தின் மீதும் அரசியல் செய்கின்றன, நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் குடும்பத்தை போன்றவர்களே.
இந்த சம்பவத்தால் கர்நாடகாவின், பெங்களூருவின் அடையாளம் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வேறு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கிறோம். எதிர்பாராமல் நடந்து விட்டது. இவ்வளவு பெருங் கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆர்சிபி வெற்றிக்காக 18 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் இளைஞர்கள் மத்தியில் எது உந்து சக்தியாக இருந்து இங்கே கூடச் செய்தது என்பது விவாதப் பொருள். நடந்தது நடந்து விட்டது. இனி துயரில் பங்கேற்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கான மரியாதையை செலுத்த வேண்டும். முதல்வர் அதிர்ச்சியில் உள்ளார். உள்துறை அமைச்சரும் தான். ஏன் ஒட்டுமொத்த மாநிலமும் அதிர்ச்சியில் தான் உள்ளது” என்றார்.