சிம்லா: இமாச்சலில் கடந்த 4 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இமாச்சலின் பங்க்லூயட் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த கிராமத்திலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜுவாலப்பூர் என்ற இடத்தில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவர்கள் அடித்துச் செல்லப்பட்டு 10 நாட்களான நிலையில் நேற்று சடலங்கள் மீட்கப்பட்டன. 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரில் தற்போது கெம் லதா (23) என்பவர் மட்டும் உயிருடன் உள்ளார். அவரது தாய் தேவகி, அண்ணன் ஜாபர், 9 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. கெம் லதாவின் பாட்டி, தந்தை பத்மா சிங், மைத்துனி பார்வதி, 7 வயது சிறுவன் உள்ளிட்டோரின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவர்களின் உடல்களை தேடும் பணி நீடிக்கிறது.