சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 13 வரை மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மொத்தம் 98 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல் அரசு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி 98 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 57 பேர் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகள் போன்ற பேரிடர் பாதிப்புகளில் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 41 பேர் மழை காரணமாக ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
இதில் மேக வெடிப்புகளால் 15 பேர், நீரில் மூழ்கி 9 பேர், திடீர் வெள்ளத்தில் 8 பேர், பாம்புக் கடியால் 4 பேர், நிலச்சரிவு மற்றும் தீ விபத்தில் தலா ஒருவர், மின்சார தாக்குதல் உள்ளிட்ட பிற காரணங்களால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பருவமழையில் மண்டி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தில் 21 பேர் மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர், 27 பேர் காணாமல் போயுள்ளனர்.
இமாச்சல் பருவமழை பாதிப்புகளால் இதுவரை 178 பேர் காயமடைந்துள்ளதாகவும், 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. இந்த காலகட்டத்தில் கனமழை பேரிடர்களால் 22,454 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 668 வீடுகள் சேதமடைந்ததாகவும், மாநிலத்தில் இதுவரை ரூ.770 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இமாச்சலில் கடந்த 24 நாட்களில் 31-க்கும் மேற்பட்ட திடீர் வெள்ளங்கள், 22 மேக வெடிப்புகள் மற்றும் 18 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.