பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.7) ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்காக அங்கு விரைந்துள்ளனர். இதில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சிம்லாவில் இருந்தபடி நிலைமையை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் இருந்து இமாச்சலில் உள்ள குமர்வின் பகுதிக்கு 30 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது பேருந்து பிலாஸ்பூரின் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது நிலச்சரிவு காரணமாக பேருந்தின் மீது பாறைகள் மற்றும் மண் சரிந்தன. இதையடுத்து நிலச்சரிவின் இடிபாடுகளில் பேருந்து சிக்கியது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் பயணித்து உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சலின் கங்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு பேருந்து விபத்தில் சுமார் காயமடைந்துள்ளனர்.