புதுடெல்லி: சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்தால் காடுகளே இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இமாச்சல் பிரதேச வெள்ள பாதிப்பு தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளில் வெட்டப்பட்ட மரங்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் காட்சிகள் வெளியாகின. கூடவே அவை சட்டவிரோதமாக வெட்டப்பட்டு பதுக்கப்பட்ட மரங்கள் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில், மலைப்பிரதேசங்களில் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்தால் காடுகளே இருக்காது என்று கவலை தெரிவித்துள்ளது. மேலும், சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக மத்திய அரசும், சம்பந்தப்பட்ட இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மாநில அரசுகளும் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறுகையில், “பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு எதிர்பாராதது. இமாச்சலப் பிரதேச பாதிப்பு தொடர்பான ஊடகச் செய்திகளில் வெள்ளத்தில் வெட்டப்பட்ட மரங்கள் அதிகளவில் மிதப்பதை காணமுடிந்தது. இதிலிருந்து இப்பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. இப்படியே சென்றல் இனி காடுகளே இருக்காது.” என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், “மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் இவ்வளவு அதிகளவில் வெட்டப்பட்ட மரக்கட்டைகள், மரங்கள் மிதந்ததற்கான காரணத்தை அறிய வேண்டும்” என்று உத்தரவிட்டார். அதற்கு துஷார் மேத்தா, “இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை செயலரை தொடர்பு கொண்டு விரிவான தகவல் பெறப்படும்.” என்று உறுதியளித்தார். இந்த வழக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.