தரம்சாலா: திபெத்தைச் சேர்ந்த ஆன்மிக தலைவர் டென்ஜின் கியாஸ்டோ 14-வது தலாய் லாமாவாக உள்ளார். தரம்சாலா அருகே உள்ள தலாய் லாமா கோயிலில் அவருடைய 90-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தலாய் லாமா நீண்ட காலம் வாழ்வதற்கான பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு, புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலாய் லாமா கூறும்போது, “பல தீர்க்க தரிசனங்களைப் பார்க்கும்போது, அவலோகிதேஸ்வரரின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இதுவரை மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இன்னும் 30 – 40 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வேன் என நம்புகிறேன். இதுவரை உங்கள் பிரார்த்தனைகள் பலன் அளித்துள்ளன” என்றார்.