இந்தூர்: இந்தூர் நகரில் மிகவும் பிரபலமான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (நியோ நேட்டல் சிகிச்சைப் பிரிவு) அனுமதிக்கப்பட்டிருந்த 2 குழந்தைகள் எலிகள் கடித்துக் குதறியதில் உயிரிழந்த சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இது விபத்தல்ல; அப்பட்டமான கொலை. இந்தச் சம்பவம் அச்சம் தருகிறது. இது சற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம். இதைக் கேட்கும்போது உடம்பு சில்லிடுகிறது. ஒரு தாயின் குழந்தை நிரந்தரமாக களவாடப்பட்டுள்ளது. காரணம் அரசாங்கத்தின் அலட்சியம். அரசு அதன் கடமையை செய்யத் தவறியதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று காங்கிரச் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன? – மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மிகவும் பிரபலமான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள என்ஐசியூ எனப்படும் நியூநேட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் (பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு) பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்தப் பிரிவில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை, எலிகள் கடித்துக் குதறியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவமனைதான் மத்திய பிரதேச மாநிலத்திலேயே மிகப் பெரிய மருத்துவமனை என்று பெயர் பெற்றதாகும்.
அந்த சிறப்பு வாய்ந்த மருத்துவமனையின் என்ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளை எலிகள் கடித்தது. இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தைகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளன.