மும்பை: ‘நாங்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. பள்ளிகளில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்’ என சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அம்மாநில அரசு அறிவித்தது. அதில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த அறிவிப்பை ஆளும் பாஜக தலைமையிலான அரசு திரும்பப் பெற்றது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசாங்கம் எங்கள் மீது இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர். இதற்கு பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து, மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “எங்களது போராட்டம் இந்தி மொழியை எதிர்ப்பது அல்ல. ஆனால், பள்ளிகளில் இந்தியை திணிக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
தென் மாநிலங்கள் இந்தப் பிரச்சினைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிரான அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால், அவர்கள் இந்தி பேச மாட்டார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் அப்படி அல்ல. இங்கு எங்களது நிலைப்பாடு வேறு. இங்கு நாங்கள் இந்தி பேசுகிறோம்.
தொடக்கப்பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அதுதான் எங்களது போராட்டம். இங்கு யாரையும் இந்தி பேசக்கூடாது என நாங்கள் சொல்லவில்லை. இங்கு இந்தி மொழி படங்கள், இந்தி மொழி நாடகங்கள், இந்தி இசை போன்றவை வழக்கத்தில் உள்ளன.
அரசியலுக்காகவே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள் எதற்காக இணைந்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் அண்மையில் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. >>அதை விரிவாக வாசிக்க…