திருவனந்தபுரம்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்தியாயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மலையாள நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமல் செய்தார். கடந்த 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை 21 மாதங்கள் அவசர நிலை அமலில் இருந்தது.
இந்த அவசர நிலை காலத்தில் நான் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து இந்தியாவின் நிலையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்தேன். அவசர நிலையின்போது மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைகளில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன.
இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, கட்டாய கருத்தடை திட்டத்தை அமல்படுத்தினார். இது அவசர நிலையின் அவலத்துக்குமிகச் சிறந்த உதாரணம் ஆகும். தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் குடிசை பகுதிகள் இடிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏழைகள் வீடு, உடைமைகளை இழந்து பரிதவித்தனர்.
இந்திரா காந்தியின் அவசர நிலை, நமக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. அப்போது நாட்டின் 4-வது தூணான பத் திரிகை துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. இதுபோன்ற சூழல் இனிமேல் ஏற்படக்கூடாது என்ற படிப்பினையை அவசர நிலை நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.
இன்றைய இந்தியா, கடந்த 1975-ம் ஆண்டு இந்தியா கிடையாது. இப்போது நமது நாடு மிகவும் வலுவாக, வளமாக இருக்கிறது. நாட்டின் சுதந்திரம் செழித்தோங்கி வளர்ந்து வருகிறது. கடந்த 1975-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை, இந்தியாவின் கருப்பு அத்தியாயம் ஆகும். இதில் இருந்து நாம் பல்வேறு பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். எந்த சூழலிலும் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கக்கூடாது. அடக்குமுறைக்கு எதிராக வீரமாக, தீரமாகப் போரிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அணி மாறும் சசி தரூர்? – கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது. வரும் 2026-ம் ஆண்டில் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பேரவைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதே காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு பலரும் போட்டியிடுகின்றனர். திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் முதல்வர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறார். ஆனால் கேரள காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி வருகின்றனர். இந்த சூழலில் அண்மைக்காலமாக சசி தரூர், காங்கிரஸை விமர்சித்தும் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்தும் பேசி வருகிறார்.
தேர்தல் நேரத்தில் அவர் அணி மாறக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் முரளிதரன் கூறும்போது, “சசி தரூர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கேரள காங்கிரஸில் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.