சண்டிகர்: இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்-21 வெறும் ஒரு விமானம் அல்ல; அது இந்தியா – ரஷ்யா இடையேயான ஆழமான உறவின் சான்று என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள், இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் மற்றும் இடைமறிப்பு விமானங்களாக செயல்பட்டன. 1960களின் முற்பகுதியில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானங்கள், 1965, 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர்களில் முக்கிய பங்காற்றின. மேலும், 1999 கார்கில் போர், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றிலும் மிக்-21 போர் விமானங்கள் முக்கியப் பங்காற்றின.
இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்து வந்த மிக்-21 போர் விமானங்களுக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வு சண்டிகரில் இன்று நடைபெற்றது. ராணுவப் பயன்பாட்டில் இருந்து அவற்றை நீக்கும் இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி உள்பட ஏராளான ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், “மிக்-21 விமானம் தனது செயல்பாட்டில் இருந்து விடைபெறுகிறது. மிக்-21, வெறும் போர் விமானங்கள் மட்டுமல்ல. அவை, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் ஆழமான உறவின் சான்று. இந்திய விமானப்படை வரலாற்றிலும், ராணுவ விமான போக்குவரத்து வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் குறிப்பிடப்படும் ஒரு அத்தியாயம் மிக்-21.
சர்வதேச அளவில் ராணுவ விமானப் போக்குவரத்து வரலாற்றில் வேறு எந்த போர் விமானமும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டதில்லை. உலக அளவில் 11,500-க்கும் மேற்பட்ட மிக்-21 போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் சுமார் 850, இந்திய விமானப்படையில் பணியாற்றின. இந்த எண்ணிக்கையே, இந்த போர் விமானத்தின் புகழ், நம்பகத்தன்மை மற்றும் பல பரிமாண திறன்களுக்கு சான்றாகும்.
1971 போரை யாரால் மறக்க முடியும்? பாகிஸ்தான் உடனான அந்த போரின்போது, டாக்காவில் உள்ள ஆளுநர் மாளிகையை மிக்-21 துல்லியமாக தாக்கியது. இந்த சம்பவம், போரின் போக்கை தீர்மானிப்பதாக அமைந்தது. இதுபோல, மிக்-21 பல தருணங்களில் தனது தீர்க்கமான திறனை நிரூபித்துள்ளது. அதன்மூலம், இந்திய தேசிய கொடியை கவுரவித்துள்ளது.
நமது நாகரிகமும் கலாச்சாரமும் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, நம் வாழ்வில் பங்களித்த அனைத்துக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதை கற்பிக்கின்றன. ஒவ்வொரு சிறிய, பெரிய விஷயங்களையும் நாம் மிகவும் மதிக்கும்போது, மிக்-21 நமது தேசிய பெருமை. அது நமது பாதுகாப்பு கேடயமாகவும், நமது வலிமையின் அடையாளமாகவும் விளங்கியது. எனவே, நாம் எவ்வாறு அதனை மதிக்கத் தவற முடியும்? இது ஒரு கலாச்சார மரபின் நீட்டிப்பு. நமது வீரர்கள் ஓய்வுபெறும்போது அவர்களை கவுரவிப்பதுபோல, பல தசாப்தங்களாக நமது பாதுகாப்பின் சுமையை தனது இறக்கைகளில் சுமந்த இந்த வலிமைமிக்க இயந்திரத்தை இன்று நாம் கவுரவிக்கிறோம்.
மிக்-21 நமது நாட்டின் நினைவுகளிலும் உணர்ச்சிகளிலும் ஆழமாக பதித்துள்ளது. 1963ல் தொடங்கப்பட்டதில் இருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பிட முடியாத பயணத்தை அது மேற்கொண்டுள்ளது. 1960கள் மற்றும் 70களில் நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்ட மிக்-21 போர் விமானங்கள், நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லை. தற்போது நமது ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள மிக்-21 போர் விமானங்கள் 40 ஆண்டுகள் பழமையானவை. 40 ஆண்டு ஆயுட்காலம் என்பது முற்றிலும் இயல்பானது.
மிக்-21 விமானத்துடன் பயணித்த அனைத்து விமானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள், பொறியாளர்கள் என அனைவரையும் நான் மனதார வணங்குகிறேன். நமது விமானிகள், தங்கள் உயிரை பணயம் வைத்து வானில் நமது எல்லைகளைப் பாதுகாத்து வருகின்றனர். மேலும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வியர்வை மற்றும் திறமையால் நமது விமானங்கள் ஒவ்வொரு முறையும் முழு திறனுடன் பறப்பதை உறுதி செய்கின்றனர்.” என தெரிவித்தார்.