புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 2026ல் 6.4% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ள நிலையில், அதைச் சுட்டிக்காட்டி இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) ஜூலை மாத அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. அதில், கடந்த 2024ல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5% ஆக இருந்ததாகத் தெரிவித்துள்ள ஐஎம்எஃப், 2025 மற்றும் 2026ல் 6.4% ஆக இருக்கும் என கணித்துள்ளது. உலக அளவில் வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம் இருப்பதாக ஐஎம்எஃப் கணித்துள்ளது.
வளர்ந்த பொருளாதாரங்களில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2024ல் 2.8% ஆக இருந்ததாகவும், 2025ல் இது 1.9 ஆகவும், 2026ல் இது 2% ஆகவும் இருக்கும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது.
சீனவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 2024ல் 5% ஆக இருந்த நிலையில் அது 2025ல் 4.8% ஆகவும், 2026ல் 4.2% ஆகவும் இருக்கும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.