புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது தெரியும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவும் ரஷ்யாவும் உயிரற்ற பொருளாதாரங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “அவர் சொன்னது சரியானதுதான். பிரதமர், நிதி அமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் உயிரற்ற பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிபர் ட்ரம்ப் உண்மையைச் சொன்னதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் ஏன் ஆச்சரியப்டுகிறீர்கள்? பாஜக நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. அதை ஏன் அவர்கள் செய்தார்கள் என்றால், அதானிக்கு உதவத்தான்.
அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும். ஆனால், அதை அமெரிக்க அதிபர்தான் வரையறுப்பார். அவர் சொல்வதை பிரதமர் மோடி செய்வார்.
இந்திய வெளியுறவுக் கொள்கை மிகவும் உன்னதமானது என வெளியறவுத்துறை அமைச்சர் பேசுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனாவும் அதையே பின்தொடர்கிறது. மூன்றாவதாக, உலகம் முழுவதற்கும் நீங்கள் பிரதிநிதிகளை அனுப்பினீர்கள். ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. அவர்கள் நாட்டை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். அவர்களுக்கு நாட்டை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.