புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவு அறிக்கையை அமெரிக்க சுங்கம் மற்றும் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கொள்கையின் கீழ் இந்த வரிகள் இந்தியா மீது விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (ஆக. 27) நள்ளிரவு 12.01 மணிக்கு பிறகு கூடுதல் வரிகள் அமலுக்கு வரும்.
இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் 66 சதவீத ஏற்றுமதி பாதிப்படையும் என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், இறால், கம்பளங்கள், பர்னிச்சர் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 60.2 பில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 2025-ம் நிதியாண்டில் 86.5 பில்லியன் டாலராக இருந்தது. தற்போதைய 50 சதவீத வரி விதிப்பால் நடப்பு நிதியாண்டில் இது 49.6 பில்லியன் டாலராக குறையும்.
ஒட்டுமொத்தத்தில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் மொத்தம் 43 சதவீத சரிவு ஏற்படும். குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்பும் ஏற்படும். இது இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் தீவிரமான சவாலை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த அளவில் இவற்றின் தாக்கம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக சரிவடையச் செய்யும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எந்தவித நெருக்கடிகளுக்கும் இந்தியா அடிபணியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “குறு, சிறு நிறுவனங்கள், விவசாயிகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ளேன். அதற்கு தடையாக எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதற்கு அடிபணிய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.