புதுடெல்லி: ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியா உலகத்துக்கு ஏராளமான விஷயங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், இந்திய அமைப்பில் சில பிழைகள் உள்ளன. அதனை எதிர்கொள்வதில் இந்தியா சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகள் உள்ளன. ஜனநாயக அமைப்பு அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. ஆனால் தற்போது, அந்த ஜனநாயக அமைப்பு பல திசைகளிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா எக்ஸ் பக்கத்தில், “ராகுல் காந்தி மீண்டும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரகர் போல பேசி உள்ளார். வெளிநாட்டுக்குச் சென்று இந்திய ஜனநாயகத்தை விமர்சிக்கிறார். சில நேரங்களில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் நம் நாட்டு உள் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்று கோருகிறார்” என பதிவிட்டுள்ளார்.
கங்கனா ரனாவத் கண்டனம்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கூறியதாவது: இந்திய ஜனநாயகம் மீதான ராகுல் காந்தியின் கருத்து அரசுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களையும் அவமானப்படுத்துவது போன்றதாகும். அவர் இகழ்ச்சிக்கு உரியவர். அவர் எங்கு சென்றாலும் நாட்டை விமர்சித்து அவமானப்படுத்த முயற்சிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இந்த நாட்டின் மக்கள் நேர்மையற்றவர்கள் என்று கூறுகிறார்.
அப்படியானால், அவர் இந்தியர்களை அறிவில்லாதவர்கள் என்பது போல சித்தரிக்க முயற்சிக்கிறார். அவர் அப்படி சொல்வதால் அவரை இகழ்ச்சிக்கு உரியவர் என்று குறிப்பிடுகிறேன். அவர் எப்போதும் நாட்டுக்கு அவமானத்தை தருகிறார். மேலும் நாடும் அவரை அவமதிக்கிறது” என்றார்.
மகாத்மா காந்தி பிறந்த நாளான நேற்று உள்நாட்டு உடைகள் குறித்து கங்கனா ரனாவத் கூறும்போது, “நான் காதி புடவை, காதி ஜாக்கெட் அணிந்திருக்கிறேன். நம் நாட்டு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளன. எதிர்பாராதவிதமாக நாம் பல பொருட்களுக்காக பிற நாடுகளை சார்ந்து இருக்கிறோம். இதை தவிர்த்து சுயசார்பை எட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன்படி, நாம் காதி உடைகளை வாங்குவோம்.
கடந்த வாரம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காந்தி பிறந்த நாளில் காதி பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வார்த்தைக்கு மரியாதை கொடுப்போம்” என்றார்.