புதுடெல்லி: இந்திய ஆட்சிப் பணியின் மத்திய சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த 1989-ம் ஆண்டு பேட்ச் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கிருஷ்ணன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அயல்பணியாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இதர நிர்வாகிகளில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் இயக்குநரான தரணி காந்தி ராம் ஐஏஎஸ் (1992) மற்றும் டெல்லி மாநில உள் துறையின் முதன்மைச் செயலாளரான ஏ. அன்பரசு ஐஏஎஸ் (1996) ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்வாகி உள்ளனர்.
மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளரான குணால் ஐஏஎஸ் (2005) சங்கத்தின் செயலாளராகவும் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளரான அதிதி சிங் ஐஏஎஸ் (2009) பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சங்கத்தின் புதிய தலைவரான கிருஷ்ணன் மற்றும் இரு துணைத் தலைவர்களும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.