புதுடெல்லி: இந்தியா யாருக்கும் அடிபணியாது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு நாடுகள் மீது அதிக அளவிலான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்து வருகிறார். தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரியும், அபராத வரியும் விதித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் தொழில், வர்த்தக துறையினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா யாருக்கும் அடிபணியாது. கரோனா நெருக்கடியை நாடு ஒரு வாய்ப்பாக மாற்றி தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும். உலகெங்கிலும் உள்ள நாடுகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுகின்றன.
இந்தியா கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக ஏற்றுமதிகளைச் செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்று இந்தியா வலுவானதாக இருக்கிறது. அதிக மரியாதைக்குரியது. புதிய வர்த்தக ஏற்பாடுகளை இந்தியா உருவாக்கும். ஐக்கிய அரபு அமீரகம், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சிலி, பெரு, நியூசிலாந்து என பல நாடுகள் உள்பட பலதரப்பட்ட கூட்டாளிகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்கிறது. வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்தும் வருகிறது.
இந்தியாவை ‘‘இறந்து போன பொருளாதாரம்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கிண்டல் செய்வது வெட்கக் கேடான விஷயம். அதற்காக நான் அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியாவின் பொருளாதாரம் பற்றி பேசிய ராகுல் காந்தியை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. நாட்டின் பணம், அந்நிய செலாவணியின் இருப்பு, பங்குச் சந்தைகள் அனைத்தும் வலுவான நிலையிலேயே உள்ளன. பிற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பணவீக்கம் உலகிலேயே மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.