புதுடெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMO-வை அழைத்தனர். இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “துப்பாக்கிச் சூட்டினை நிறுத்துதல் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சமரச பேச்சு: இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வந்த மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை அவர் அறிவித்தார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இரு நாடுகளும் புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 48 மணி நேரத்தில், துணை அதிபர் ஜேடி வான்ஸும் நானும் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர், ராணுவத் தளபதி அசிம் முனீர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் அசிம் மாலிக் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாகவும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர்கள் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம் மற்றும் அரசியல் திறமையை நாங்கள் பாராட்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாக். மோதல்: நடந்தது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடித்துக் கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.