புதுடெல்லி: இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், நாமும் பதிலடியாக அவர்களின் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சசி தரூர் மேலும் கூறியது: “இந்தியாவுடனான உறவை மதிக்கவில்லையா என்பதை அமெரிக்காவிடம் நாம் கேட்க வேண்டும். அவர்களுக்கு இந்தியா முக்கியமில்லை என்றால் நமக்கும் அமெரிக்கா முக்கியமில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரியை அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது இந்தியா சராசரியாக 17 சதவீதம் மட்டுமே வரி விதிக்கிறது.
அமெரிக்காவின் இந்த ஒரு தலைபட்சமான நடவடிக்கைக்கு பதிலடியாக நாமும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 50 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும்.
அமெரிக்காவுடனான நமது வர்த்தக உறவு 90 பில்லியன் டாலராக உள்ளது. இந்த நிலையில் ட்ரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ளது அமெரிக்காவுக்கான நமது வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அமெரிக்காவின் குறைந்தபட்ச வரி விதிப்பால் பலனடைந்த நமது போட்டியாளர்களான வியட்நாம், இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்க தேசம், சீனா ஆகிய நாடுகள் தங்களது பொருட்களை அமெரிக்க சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்யும். அப்போது நமது பொருட்களை வாங்க அமெரிக்க நுகர்வோர்கள் பெரிதும் யோசிப்பர். இதனால், இந்திய பொருட்களின் விற்பனை தாமாக குறையும்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவை காட்டிலும் சீனாவின் பங்கு ஏறக்குறைய இரண்டு மடங்காக உள்ளது. ஆனால், இறக்குமதி தொடர்பாக முடிவெடுக்க சீனாவுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், நமக்கு வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதிலிருந்து இந்தியாவை எந்த இடத்தில் அமெரிக்கா வைத்துள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப நாம் எதிர்வினையாற்ற வேண்டும்” என்று சசி தரூர் கூறினார்.
மேலும் வாசிக்க>> “சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்