புதுடெல்லி: இந்தியாவைத் தாக்க நினைக்கும் தீவிரவாதிகள் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்பதை உணர்ந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நிலையை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்துவதற்காக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தலைவர்களுக்கு விளக்கி வருகின்றனர்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது சசி தரூர் தலைமையிலான எம்.பி.க்கள் பனாமா நாட்டுக்குச் சென்றுள்ளது. பனாமா நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சசி தரூர் கலந்துகொண்டு பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்து விட்டோம். பாகிஸ்தானில் இருந்தபடி, யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, தப்பிச் செல்லலாம் என்ற நிலைப்பாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளோம்.
இந்தியாவைத் தாக்கலாம் என்று நினைக்கும் தீவிரவாதிகள், அதற்கான பதிலடியைப் பெற நேரிடும் என்பதை இந்த ஆபரேஷன் சிந்தூர் மூலம் உணர்த்தியுள்ளோம். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாத தாக்குதலை அனுபவித்து வருகிறோம்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக வலி, துயரம், காயங்கள், இழப்புகள் ஆகியவற்றை நாம் தொடர்ந்து தாங்கிக் கொண்டு, பின்னர் சர்வதேச சமூகத்திடம் சென்று, எங்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதது.
2008 மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும், சாட்சியங்களையும் வைத்திருந்தோம். தீவிரவாதிகளில் ஒருவரைக் கூட நாங்கள் உயிருடன் பிடித்தோம். மிகவும் துணிச்சலான போலீஸ்காரர் ஒருவர், தீவிரவாதி அஜ்மல் கசாப்பை உயிருடன் பிடிக்க தனது உயிரைக் கொடுத்தார். தீவிரவாதி கசாப் அடையாளம் காணப்பட்டார், அவரது வீடு, முகவரி, பாகிஸ்தானில் உள்ள அவரது கிராமம் ஆகிய அனைத்தும் அடையாளம் காணப்பட்டன. ஆனால், ஒருவரை மட்டுமே தூக்கிலிட முடிந்தது. மற்றவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வருகின்றனர். பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு ஆதரவான குரலைக் கொடுத்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதத்தை வேரறுப்போம் என்று பிரதமர் மோடி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இந்தியா மீது கை வைத்தால், திருப்பித் தாக்கப்படுவோம் என்ற அச்சம் தீவிரவாதிகளிடையே எழுந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.