புதுடெல்லி: ‘இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே முக்கியம்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய ராஜ்நாத் சிங், “ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி உள்ளிட்ட இரண்டு நீலகிரி-வகை ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கையின் வெளிச்சத்தில், நாடு இப்போது அனைத்து போர்க் கப்பல்களையும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. கடற்படை வேறு எந்த நாட்டிலிருந்தும், போர்க்கப்பல்களை வாங்குவதில்லை, அவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதாக உறுதியாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பான சுதர்ஷன் சக்ரா விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின்படி, “நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்பை தொடர்ந்து, உலகளவில், தற்போது வர்த்தகத்தில் போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
வளர்ந்த நாடுகள் பாதுகாப்புவாதத்துக்கு மாறி வருகின்றன. ஆனால், இந்தியா யாரையும் தனது எதிரியாகக் கருதுவதில்லை. அதே நேரத்தில் இந்தியா தனது தேசிய நலன்களில் எப்போதும் சமரசம் செய்யாது. நிலையற்ற புவிசார் அரசியலுக்கு மத்தியில், சுயசார்பு என்பது ஒரு நன்மை மட்டுமல்ல, ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நம் உள்நாட்டு வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களின் வெற்றி உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 2014 இல் ரூ.700 கோடிக்கும் குறைவாக இருந்தது. அது இன்று கிட்டத்தட்ட ரூ.24,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது பாதுகாப்பு தளவாடங்களில் வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக இந்தியா மாறியதைக் குறிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்