புதுடெல்லி: கடற்படை பயன்பாட்டுக்காக ஜெர்மனி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் 6 நவீன நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கடற்படை அடுத்த 10 ஆண்டுகளில், தன்னிடம் உள்ள 10 பழைய நீர்மூழ்கி கப்பல்களை மாற்ற திட்டமிட்டுள்ளது. எல் அண்ட் டி போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்திலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் தனது கடற்படையை விரைவாக விரிவுபடுத்தி வருவதால், இந்தியாவும் தனது கடற்படையை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ப்ராஜெக்ட் 75 இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மசகான் டாக்யார்டு நிறுவனமும் (எம்டிஎல்), ஜெர்மனியின் தைசேன்குரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனமும் இணைந்து ரூ.70,000 கோடி மதிப்பில் 6 நவீன நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலோசனை: இந்திய கடற்படைக்கு எதிர்காலத்தில் நீர்மூழ்கி கப்பல்களின் தேவை குறித்து பாதுகாப்புத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்துக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெர்மனியுடன் கூட்டு தயாரிப்பில், இந்தியாவில் தயாராகும் புதிய நீர்மூழ்கி கப்பல்களில் ‘ஏர் இன்டிபென்டன்ட் புரொபல்ஷன் (ஏஐபி) சிஸ்டம்ஸ்’ என்ற நவீன அம்சம் இடம் பெறும். இதன் மூலம் 3 வார காலத்துக்கு, நீர் மூழ்கி கப்பல்கள் தண்ணீருக்கு அடியில் இருக்க முடியும். இந்த பாதுகாப்பு அம்சத்துடனான நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கடற்படையின் திறனுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.
இந்த பேச்சுவார்த்தை தொடங்கிய 6 மாதத்துக்குள், 6 நவீன நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.