புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2013-ல் 40 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 10 ஆண்டுகளில் அதாவது 2023-ல் 25 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் (infant mortality rate – IMR) என்பது ஒரு வருடத்தில் உயிருடன் பிறந்த 1,000 குழந்தைகளில் ஒரு வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. இது ஒரு நாட்டின் அல்லது பிராந்தியத்தின் சுகாதார அமைப்பின் செயல்திறன் மற்றும் மக்களின் கல்வி, சமூகப் பொருளாதார நிலையை காட்டுகிறது.
இந்நிலையில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலம் வெளியிட்டுள்ள 2023-ம் ஆண்டுக்கான எஸ்ஆர்எஸ் அறிக்கையின்படி கடந்த 2013-ல் 40 ஆக இருந்த ஐஎம்ஆர் 2023-ல் 25 ஆக குறைந்துள்ளது. அதாவது 37.5 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் 1971-ல் 129 ஆக இருந்த ஐஎம்ஆர் வியக்கத்தக்க வகையில் 80 சதவீதம் சரிந்துள்ளது.
2023 அறிக்கையின்படி நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐஎம்ஆர் 37 ஆக உள்ளது. குறைந்தபட்சமாக மணிப்பூரில் 3 ஆக உள்ளது. மிகப் பெரிய மாநிலங்களில் கேரளாவில் மட்டும் ஐஎம்ஆர் ஒற்றை இலக்கத்தில் 5 ஆக உள்ளது. இம்மாநிலம் மணிப்பூருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது.