புதுடெல்லி: விமான விபத்து குறித்த இறுதி அறிக்கை வரும் வரை நிதானம் காக்குமாறு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்திக்கு ஏஏஐபி எதிர்வினையாற்றியுள்ளது.
இது தொடர்பாக விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு (ஏஏஐபி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு தனது விசாரணையை விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட 2012-ல் இருந்து 92 விபத்துக்கள் மற்றும் 111 கடுமையான சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளது. இதன்மூலம் ஏஏஐபி குறைபாடற்ற சாதனையை படைத்துள்ளது.
இதேபோல், சமீபத்திய விமான விபத்துக்களில் மிகவும் மோசமானதான அகமதாபாத் விமான விபத்து குறித்தும் ஏஏஐபி, விதிகளுக்கு உட்பட்டும் சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்பவும் தொழில்முறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த விமான விபத்து பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இந்திய விமானத் துறையின் பாதுகாப்பு முறைக்கு எதிராக பொதுமக்களின் கவலையை அல்லது கோபத்தைத் தூண்டுவதற்கான நேரம் இதுவல்ல. குறிப்பாக, உண்மையற்ற கருத்துகளின் அடிப்படையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல.
இந்த விமான விபத்தில் உயிரிழந்த பயணிகள், விமானப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் வேதனையை உணர்ந்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். உண்மையற்ற கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் சில சர்வதேச ஊடகங்கள், மீண்டும் மீண்டும் முடிவுகளை எடுக்க முயல்கின்றன என்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இத்தகைய செயல்கள் பொறுப்பற்றவை.
முன்கூட்டிய முடிவுகளின் அடிப்படையில் கதைகளை உருவாக்குவது புலனாய்வு செயல்முறையை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்பதால், இதை தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஏஏஐபி-யின் முதற்கட்ட அறிக்கை என்பது என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக மட்டுமே. முதற்கட்ட அறிக்கையை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில், திட்டவட்டமான முடிவுக்கு வருவது சரியல்ல. ஏஏஐபியின் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. விபத்துக்கான காரணம் என்ன, இதுபோன்ற விபத்து மீண்டும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் வெளிவரும்.
எனவே, விசாரணை முழுமையாக நிறைவடைந்து இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறு ஏஏஐபி அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்தும், பொதுமக்களின் நலன் சார்ந்தும் வெளியிட வேண்டியவை இருப்பின் அவற்றை ஏஏஐபி வெளியிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்துக்கு எரிபொருள் சப்ளை குறைந்ததே காரணம் என்றும், எரிபொருள் சப்ளை குறைந்ததற்கு, அதற்கான சுவிட்ச் ஆஃப் மோடில் இருந்ததே காரணம் என்றும் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி, விமானிதான் கவனக்குறைவாக சுவிட்சை ஆஃப் செய்திருப்பார் என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட நிலையில், ஏஏஐபி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.