புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, கடந்த வாரம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி போலீஸார், கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும். இதனை அமல்படுத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் தங்களின் கடமையைச் செய்ய தவறிவிட்டனர்.
பெங்களூரு, மட்டுமல்ல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று முறைகேடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கும் இது தெரியும். முன்பு ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது. தற்போது எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. நாங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். தொடர்ந்து செய்வோம். நிறுத்த மாட்டோம். தற்போது டீசர் மட்டும்தான் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சில படங்கள் (மெயின் பிக்சர்) இன்னும் உள்ளன. அவை விரைவில் வெளிவரும்.
இந்த போராட்டம் என்பது அரசியல் கிடையாது. அரசியலமைப்பை காப்பாற்றவே இந்தப் போராட்டம். ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதை நிலைநாட்டவே இந்த போராட்டம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரியங்கா காந்தி, ஆர்.சுதா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மின்டா தேவி மற்றும் அவரது படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்தனர். டி-ஷர்ட் பின்புறத்தில் ‘124 நாட் அவுட்’ என்று எழுதப்பட்டிருந்தது. பிஹார் வாக்காளர் பட்டியலில் 124 வயது மின்டா தேவியின் பெயர் முதல்முறை வாக்காளராக இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், “இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இவை தொடர்ந்து வெளிவரும்” என்றார். பிரியங்கா காந்தி கூறுகையில், “பிஹார் வாக்காளர் பட்டியலில் போலியாக இடம்பெற்றுள்ள பெயர்கள், முகவரிகள் என நிறைய உள்ளன” என்றார்.
இந்நிலையில் இவர்களின் கூற்றை தனியார் தொலைகாட்சி ஒன்று ஆராய்ந்ததில், சிவான் மாவட்டத்தின் தரவுண்டா சட்டப் பேரவை தொகுதியில் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்ட மின்டா தேவிக்கு 124 வயது அல்ல, 35 வயது என கண்டறியப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மின்டா தேவியின் விண்ணப்பப் படிவத்தில் உள்ள பிழை காரணமாக வாக்காளர் பட்டியலில் அவரது வயது மாறியுள்ளது” என்றார்.