புதுடெல்லி: நாடு சுந்திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் சோவியத் ஒன்றியத்தின் தூதராக இருந்த தமிழரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் இரண்டாவது முறையாக இப்பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலைவர் பதவியையும் அடைந்தார்.
1962-ல் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போலவே ஜாகிர் உசேனும் தொடர்ந்து 1967-ல் குடியரசுத் தலைவரானார். இதுவரை எவரும் பெறாத வகையில் மூன்று வெவ்வேறு பிரதமர்களின் ஆட்சியில் குடியரசு துணைத் தலைவர் பதவி வகிக்கும் வாய்ப்பு பி.டி.ஜாட்டிக்கு கிடைத்தது. இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சவுத்ரி சரண் சிங் ஆகியோர் ஆட்சியில் அவர் இப்பதவி வகித்தார்.
முஸ்லிம்களில் இரண்டாவது வாய்ப்பு, நீதிபதி இதாயத்துல்லாவுக்கு கிடைத்தது. பன்முகத் திறமை கொண்ட இவர் ஒருவர்தான் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், தலைமை நீதிபதி என மூன்று உயர் பதவிகளை வகித்தவர். அரசியல் பின்னணி இல்லாமல் அதிகாரியாக இருந்த ஹமீது அன்சாரி, குடியரசு துணைத் தலைவரான மூன்றாவது முஸ்லிம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு பிறகு இவரும் தொடர்ந்து 2-வது முறையாக குடியரசு துணைத் தலைவர் ஆனார்.
1992-ல் நடைபெற்ற தேர்தலில் தலித் சமூகத்தினரில் முதல்முறையாக குடியரசு துணைத் தலைவர் வாய்ப்பை கே.ஆர்.நாராயணன் பெற்றார். குடியரசு துணைத் தலைவரான முதல் பாஜக தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் ஆவார். இவரை எதிர்த்து போட்டியிட்ட யுபிஏ வேட்பாளர் ஷிண்டே தோல்வி அடைந்தார்.
இருப்பினும் 2007 யுபிஏ ஆட்சியின் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீலிடம் ஷெகாவத் தோல்வியடைந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த முதல் குடியரசு துணைத் தலைவர் ஷெகாவத் ஆவார். இவருக்கு பிறகு, பாஜகவினர் பட்டியலில் வெங்கய்ய நாயுடு, ஜெகதீப் தன்கருக்கு குடியரசு துணைத் தலைவர் வாய்ப்பு கிடைத்தது.
மூத்த காங்கிரஸ் தலைவர் சங்கர் தயாள் சர்மா, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், முதல்வர், கேபினட் அமைச்சர் போன்ற உயர் பதவிகளை வகித்த ஒரே அரசியல்வாதி ஆவார். இதுவன்றி, காங்கிரஸ் தேசியத் தலைவர் பதவியும் இவர் வகித்துள்ளார்.
தற்போது 15-வது குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முன், இப்பதவி வகித்த 7 பேர் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தனர். குடியரசு துணைத் தலைவராக இருந்த கிருஷ்ண காந்த் தனது பதவிக் காலத்தில் இறந்தார். இதுவரை குடியரசு துணைத் தலைவராக பெண் பதவி வகிக்கவில்லை