புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இண்டியா கூட்டணியில் உள்ள 315 எம்.பி.க்களும் இந்த தேர்தலில் வாக்களித்தனர். ஆனால் இந்த அணியில் உள்ள 15 எம்.பி.க்கள், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்ததால் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு என்பதால், யார் அணி மாறி வாக்களித்தது என்பதை கண்டறிய முடியாது. இந்நிலையில்,
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள சில எம்.பி.க்கள், மனசாட்சியுடன் தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பான நன்றி.
தே.ஜ. கூட்டணி மற்றும் நமது நட்பு எம்.பி.க்கள் ஒற்றுமையாக உள்ளோம். அடக்கமான, திறமையான மற்றும் உண்மையான தேச பக்தரை நாட்டின் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.