நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக காங்கிரஸ் கூட்டியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ல் தொடங்குகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியுள்ளது.
இதில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சுற்றி வளைக்க வியூகங்கள் திட்டமிட உள்ளன. இதற்காக ஜூலை 20-ம் தேதி (இன்று) கட்சியின் தேசியத் தலைவர் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் ஒரு இணையவழிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது எனவும் இதன்மூலம், அக்கட்சி இண்டியா கூட்டணியில் தன் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாகவும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து தகவல்கள் பரவியுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை பெரும்பான்மையிலிருந்து விலக்கி வைக்க, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா முக்கியக் காரணமாக அமைந்தது.
இதன் உறுப்பினர்களில் ஒருவராக டெல்லியை ஆட்சி செய்த அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் உள்ளது. இது, கூட்டணியின் காரணமாக மக்களவைத் தேர்தல் போட்டியில் காங்கிரஸுடன் இணைந்திருந்தது. ஆனால், டெல்லியின் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாமல் போனது.
இதனால், இண்டியா கூட்டணியிடமிருந்து ஆத்மி, இடைவெளியை கடைப்பிடித்தது. இப்போது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக, கூட்டணியுடனான அதன் அனைத்து உறவுகளையும் முற்றிலுமாக முறித்துக் கொண்டுள்ளது. ஆம் ஆத்மியின் இந்த அரசியல் நடவடிக்கை காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட குரல் பலவீனப்படும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் கூறுகையில், ’எங்கள் கட்சியும் அர்விந்த் கெஜ்ரிவாலும் ஏற்கனவே நாங்கள் இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே. எனினும், மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமூல் காங்கிரஸ்(டிஎம்சி), தமிழ்நாட்டின் திமுக போன்ற எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி ஆதரிப்பதால், அக்கட்சிகளின் ஒருங்கிணைப்பைப் பேணி, நாடாளுமன்றப் பிரச்சினைகளில் ஆதரவளிக்கும்’ என்றார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பியான சஞ்சய் சிங், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து கடுமையாக விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் சக்திவாய்ந்த குரல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். ஆனால் மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மியின் விலகல் என்பது இண்டியா கூட்டணியில் விரிசல் எனும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 8, மக்களவையில் 3 எம்பிக்களும் உள்ளனர். இது நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
மழைக்காலக் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி அரசை பல்வேறு பிரச்சினைகளில் உறுதியுடன் எதிர்க்க பல உத்திகளை காங்கிரஸ் வகுக்கிறது. பிஹாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கருத்துக்கள் உள்ளிட்டவை இதில் அடங்கியுள்ளன. ஆனால், ஆம் ஆத்மியைப் பொறுத்தவரை, உத்தரபிரதேசம், பிஹார் மற்றும் டெல்லியில் பொது மக்களின் குடியிருப்புகள் புல்டோசர்களால் இடிக்கப்படுவது மட்டுமே முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
மேலும், ஆம் ஆத்மியின் நேரடி மோதல் காங்கிரஸுடன் உள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, குஜராத், கோவா போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடி அரசியல் போட்டி நிலவுகிறது. ஏற்கெனவே, இண்டியா கூட்டணியின் வேறு சில கட்சிகளும் பாதை மாறத் தொவங்கியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டப்போரவைத் தேர்தலுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா யுபிடி, காங்கிரஸ் இடையே பிரச்சினை உருவாகி உள்ளது. இதற்கும் முன்பாக இண்டியா கூட்டணியின் கூட்டங்களில் திரிணமூல் காங்கிரஸ் கலந்து கொள்வதை நிறுத்தி உள்ளதும் நினைவுகூரத்தக்கது.