புதுடெல்லி: இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்குச் செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (புதன்கிழமை) புறப்பட்டார்.
முன்னதாக தனது பயணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகளுக்கு நான் பயணம் மேற்கொள்கிறேன். இந்தியாவும் இங்கிலாந்தும் சமீப ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் விரிவான கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, நிலைத்தன்மை, சுகாதாரம், மக்களிடையேயான உறவு என பரந்து விரிந்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் உடனான எனது சந்திப்பின்போது, இரு நாடுகளின் செழிப்பு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதற்கான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவோம். இந்த பயணத்தின்போது, மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திப்பதற்கும் நான் ஆவலாக உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து மாலத்தீவுக்குச் செல்ல உள்ளேன். இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டதன் 60-வது ஆண்டாகும். விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான கூட்டுப்பார்வையை முன்னேற்றவும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு, ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அதிபர் முய்சு மற்றும் பிற தலைவர்களுடனான எனது சந்திப்புகளை நான் எதிர்நோக்குகிறேன்.
இந்த பயணம் உறுதியான விளைவுகளைத் தரும், நமது மக்களுக்குப் பயனளிக்கும். அதோடு, நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நமது கொள்கையை முன்னேற்றும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் இரு நாடுகளும் தடையற்ற வர்த்தகத்துக்கு கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணத்தின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
அப்படி ஒப்பந்தம் ஏற்பட்டால், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 99 சதவீதம் வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பயனடைவார்கள். அதேபோல, பிரிட்டனில் இருந்து இந்திய சந்தைகளுக்கு விஸ்கி மதுபான வகைகள் வரத்து, ஆட்டோமொபைல், நிதி சேவைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.