புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்றபோது, மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சோனாமா மரக்கன்றை பரிசாக அளித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கடம்ப மரக் கன்று ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார்.
அந்த மரக்கன்றை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நட்டார். இந்த போட்டோவை வெளியிட்ட டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் விடுத்துள்ள செய்தியில் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு கடம்ப மரக் கன்றை இங்கிலாந்து மன்னர் பரிசாக அனுப்பியுள்ளார்.
தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் என்ற பிரதமர் மோடியின் திட்டம், இங்கிலாந்து மன்னரை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இருவரும் உறுதியுடன் உள்ளனர். பருவநிலை மற்றும் சுத்தமான எரிசக்தி உற்பத்தி ஆகியவை காமன்வெல்த் நாடுகளின் முக்கிய விஷயமாக உள்ளது. இவ்வாறு இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.